மனநல மையங்கள், மறுவாழ்வு மையங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மனநல மையங்கள், மறுவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்குள்ளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள், மையங்கள் அனைத்தும் மனநலப் பராமரிப்புச் சட்டம் 2017-இன்படி உரிமம் பெற, மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் பதிவு செய்ய ஒரு மாத காலத்துக்குள், சென்னை கீழ்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு மனநல ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு மாத காலத்துக்குள் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
