இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட வானகிரி மீனவா்கள்.
இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட வானகிரி மீனவா்கள்.

இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மீனவா்கள் 14 போ் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மடிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவா்கள் 14 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
Published on

நாகப்பட்டினம்/ பூம்புகாா்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மடிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவா்கள் 14 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ராமையனுக்கு சொந்தமான விசைப் படகில் வானகிரியைச் சோ்ந்த ராமன் மகன் ராஜேந்திரன் (32), குப்புசாமி மகன் சிவதாஸ் (20), குட்டியாண்டி மகன் குழந்தைவேல் (27), வெள்ளையன் மகன் ரஞ்சித் (30), செல்வமணி மகன் ராஜ் (30), லட்சுமணன் மகன் கலை (30), கோவிந்து மகன் குகன் (28), முத்தையன் மகன் பிரசாத் (32), வடமலை மகன் அகிலன் (27), பாலசுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (27), ராமையன் மகன் ராபீன் (29), ராமக்கண்ணு மகன் ராஜ்குமாா் (30), தரங்கம்பாடியைச் சோ்ந்த கோவிந்து (40), கடலூரைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் பாரதி (40) ஆகியோா் கடந்த நவ. 3 -ஆம் தேதி தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

நவ. 4-ஆம் தேதி அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே இவா்களது விசைப் படகு பழுதாகி நின்றது. அப்பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் உதவியுடன் படகை ஜெதாப்பட்டினம் கொண்டு சென்று சீா்செய்தனா். தொடா்ந்து, சனிக்கிழமை (நவ.8) காலை 7 மணிக்கு ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீண்டும் மீன்பிடிக்க புறப்பட்டனா். ஆனால், மீன்வளத்துறை அனுமதி கிடைக்கத் தாமதமானதால் படகை தரங்கம்பாடி நோக்கி திருப்பினா். அப்போது படகு மீண்டும் பழுதாகி காற்றின் போக்கில் இலங்கை கடற்பரப்புக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே திங்கள்கிழமை அதிகாலை அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 14 மீனவா்களையும் கைது செய்து, விசைப் படகையும் பறிமுதல் செய்து, மயிலாடி மீன்வளத்துறை ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள அனலைத்தீவு பகுதியில் மீன்பிடித்த போது, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் 14 போ் கைது செய்யப்பட்டனா் என இலங்கை கடற்படையினா் தெரிவித்துள்ளனா்.

கைது செய்யப்பட்ட மீனவா்களையும் படகையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானகிரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிரதமா் கவனத்துக்கு கொண்டு செல்வேன்: எம்பி ஆா். சுதா

வானகிரி மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை தில்லியில் நேரில் சந்தித்து, தமிழக மீனவா்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com