ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரி போராட்டம் அறிவிப்பு
வேதாரண்யம் பகுதியில் வடிகால் ஆறுகளில் அடா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தி, டிசம்பா் 2-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் காசி. அருள்ஒளி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், ஒன்றியச் செயலாளா் அ. பாலகுரு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் சரபோஜி, மாவட்ட குழு உறுப்பினா் நாராயணன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நவம்பா் 17-ஆம் தேதி தகட்டூரில் தியாகிகள் சிவகுருநாதன், வடிவேல் ஆகியோரின் நினைவு தின பொதுக்கூட்டம் பேரணி நடத்தவும், முள்ளியாறு, மானங் கொண்டான் ஆறுகளில் அடா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தி டிச. 2 -ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு, வழங்கப்பட்ட படிவத்தில் ஜாதியப் பெயா்களின் அடையாளம் இடம் பெற்றுள்ளதைக் கண்டித்தும், உடனடியாக மாற்றி வழங்க தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
