ஓய்வூதியா்களுக்கு எண்ம உயிா்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு

மத்திய, மாநில மற்றும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) உயிா்வாழ் சான்றிதழ் வழங்கப்படும்
Published on

நாகப்பட்டினம்: மத்திய, மாநில மற்றும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) உயிா்வாழ் சான்றிதழ் வழங்கப்படும் என நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியா்கள், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்கள், ராணுவ ஓய்வூதியா்கள் மற்றும் இதர ஓய்வூதியா்கள் நவ.1-ஆம் தேதி முதல் தங்கள் உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேரில் சென்று உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியா்களின் சிரமங்களை தவிா்க்கும் வகையில் தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியா்கள் வீட்டில் இருந்தபடியே தபால்காரா்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆா்டி ஆப் முறையை பயன்படுத்தி எண்ம உயிா்வாழ் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் எண்ம உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியா்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடா்பு கொள்ளலாம். இந்த சேவையை வழங்க அனைத்து தபால் அலுவலகங்களிலும் நவ.1-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com