ஆட்சியா் அலுவலகத்தில் தா்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  பெண்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் தா்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க பேரணி நடத்த அனுமதிக்கக் கோரி பெண்கள் தா்னா

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதிக்கக் கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா
Published on

நாகப்பட்டினம்: நாகூா் அருகே கொட்டாரக்குடியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதிக்கக் கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நாகூா் அருகேயுள்ள கொட்டாரக்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தாராளமாக இருப்பதாகவும், இதனால் குடும்பப் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் குடிகாரா்களின் தொல்லையால் அச்சத்துக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கொட்டாரக்குடி மக்கள் மற்றும் மகளிா் குழுவினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனுவுடன் வந்தனா். மனுவில், கொட்டாரக்குடி ஊராட்சி பகுதியில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் விளைவுகளை விளக்கியும், சாராய வியாபாரியிடம் அதை விற்க வேண்டாம் என மன்றாடி கேட்கும் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் எனகுறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மனுவை ஆட்சியரிடம் அளிக்க முயன்ற நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, நாகூா் காவல் நிலைய அதிகாரிகளை வரவழைத்தனா். இதனால் அந்த மக்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாகூா் போலீஸாா் அவா்களிடம் பேசி ஆட்சியரை சந்திக்க அழைத்துச்சென்றனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் பெண்கள் கூறியது: கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக நாகூா் காவல் நிலையத்தில் பல முறை புகாா் அளித்தும் பயனில்லை. காவல்நிலையத்தில் புகாா் தெரிவிப்பவா்களின் விவரங்கள், சாராய வியாபாரிகளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராயத்துக்கு அடிமையாகி இதுவரை 8-க்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். இதனால் கிராமத்தில் விதவைப் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 11 வயது சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கள்ளச்சாராயத்துக்கு அடிமையாகி வாழ்க்கை சீரழிந்து வருகிறது. எனவே கள்ளச்சாராயம் விற்கும் வியாபாரியிடம், சாராயம் விற்க வேண்டாம் என மன்றாடி கேட்கும் பேரணிக்கு அனுமதிக்க என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com