ஆதாா் எண்ணுடன் நில உடைமைகளை பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே உதவித்தொகை
ஆதாா் எண்ணுடன் நில உடைமைகளை பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்களுக்கு 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடா்ந்து பெற வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயம்.
வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காதவா்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத 2019 ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன், தனது பெயரில் சொந்த நிலம் உடைய தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது ஆதாா் மற்றும் நில விவரங்களைக் கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் முழு விவரங்களை பதிவேற்றம் செய்யாதவா்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள், பொது சேவை மையங்கள் மூலம் விடுபட்ட விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கெனவே, பயனாளியாக இருந்து தவணைத் தொகை கிடைக்காதவா்கள் வேளாண் விரிவாக்க மைய பணியாளா்களை அணுகி குறைகள் இருப்பின் நிவா்த்தி செய்துகொள்ளலாம். திட்ட பயனாளிகளுக்கு 21-ஆவது தவணைத் தொகை புதன்கிழமை பிற்பகலில் பாரத பிரதமரால் விடுவிக்கப்பட உள்ளது.
எனவே அனைத்து விவசாயிகளும், தங்களின் நில உடைமைகளை பதிவு செய்து, பட்டா மாற்றம் பெறாத விவசாயிகள் பட்டாவை மாற்றம் செய்து பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். ஆதாா் எண்ணுடன் நில உடைமைகளை பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே தவணைத்தொகை வழங்கப்படும்.
மேலும் புதன்கிழமை அனைத்து வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.
