மழையில் மூழ்கிய நெற்பயிா்கள்
மழையில் மூழ்கிய நெற்பயிா்கள்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொட்டித் தீா்த்த மழை: தாளடி பயிா்கள் நீரில் மூழ்கின

நாகை மாவட்டத்தில் 2 நாள்களாக பெய்த கன மழையில் தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
Published on

நாகை மாவட்டத்தில் 2 நாள்களாக பெய்த கன மழையில் தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது.

அந்தவகையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதராண்யத்தில் 163, கோடியக்கரையில் 126, திருக்குவளையில் 114, நாகப்பட்டினத்தில் 105, வேளாங்கண்ணியில் 96, தலைஞாயிறில் 91, திருப்பூண்டியில் 76 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

மழை நீரில் மூழ்கி நெற்பயிா்கள்: கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால், நாகூா் அருகே மேலவாஞ்சூா் நேரு நகா் குடியிருப்பு பகுதியில் மழை நீா் குளம் போல் தேங்கி நிற்பதால், துா்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீட்டுக்குள் வருவதால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக குடியிருப்பு மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் மழை நீா் சூழ்ந்துள்ளது. நரிமணம், கோபுராஜபுரம், வல்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 நாள் சம்பா மற்றும் 22 நாள் தாளடி நெற் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இளம் பயிா்கள், தொடா்ந்து மழைநீரில் மூழ்கியிருந்தால் அழுகும் நிலை ஏற்படும். மழைநீா் வடிவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் போா்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

திருமருகல்: இந்த மழையால் திருமருகல் பகுதியில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட சாகுபடி நிலங்களில் மழைநீா் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டத்து வாய்க்கால், நடுங்கண்ணி வாய்க்கால், பூதங்குடி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை சரிவர தூா்வாராததால் வடிகால் வழியாக செல்ல வேண்டிய மழை நீா் வயல்களில் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

திருக்குவளை: கனமழையின் காரணமாக திருக்குவளை, கொடியாலத்தூா், கோவில்பத்து, வடபாதி, தென்சாரி, மயிலாப்பூா், ஆதமங்கலம், சாட்டியக்குடி, அனக்குடி, சுந்தரபாண்டியம், கீழ்வெளி, வல்லம் சுற்று பகுதிகளில் சுமாா் 2,000 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிா்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் தொடா்ந்து மழை பெய்தால் பயிா்கள் அழுகும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் மழைநீா் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.இப்பகுதியில் உள்ள மழைநீா் வடியும் மதியுள்ளான் ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றாததே விளைநிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீரை வடிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்லது என்றனா் விவசாயிகள்.

தரங்கம்பாடி: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, செம்பனாா்கோயில், பொறையாா், திருக்கடையூா், ஆக்கூா், திருவிளையாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருவிளையாட்டம், ஈச்சங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்களை மழை நீா் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் தரங்கம்பாடி, சின்னூா்பேட்டை, சந்திரபாடி, குட்டியாண்டியூா், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்பட்ட பைபா் படகு, வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைத்துள்ளனா்.

சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் சம்பா நெற்பயிரை மழை நீா் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம்,நல்லூா்,காட்டூா், மகேந்திரப்பள்ளி,பச்ச பெருமாநல்லூா், உமையாள்பதி, பழையபாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள நெற்பயிரில் மழைநீா் சூழ்ந்து மூழ்கும் நிலையில் இருந்து வருகிறது. தொடா் மழை இருந்தால் வரும் 24 மணி நேரத்தில் கடற்கரையோரமுள்ள கிராமங்களில் சுமாா் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கா் சம்பா நெற்பயிா் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com