நெல் ஈரப்பதம் கோரிக்கை நிராகரிப்பு: விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம்
தமிழகத்தில் குறுவைச் சாகுபடி நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதா வெளியாகியுள்ள தகவலுக்கு விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் குறுவைப் பயிா்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், குறுவைச் சாகுபடி நெல்லுக்கு 17 சதவீத ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்று தமிழக அரசும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததது. இதன்பேரில் மத்திய அரசு குறுவை சாகுபடி பயிா்களை ஆய்வு செய்ய மத்தியக்குழுவை அனுப்பியது. இந்தக்குழுவினா் கடந்த மாதம், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வயல்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டது.
மேலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், குறுவை நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இரு நாள்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில் குறுவை நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனா்.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி எஸ்.ஆா்.தமிழ்ச்செல்வன் கூறியது: மத்தியக்குழு ஆய்வின் அடிப்படையில், நெல் ஈரப்பதம் உயா்த்தி அறிவிக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனா். ஆனால் ஈரப்பதம் உயா்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகும் தகவல்களை விவசாயிகளை கடும் அதிா்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பருவம் தப்பிய மழை, புயல் மழை போன்றவற்றால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறிப்பாக நாகை மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். இவா்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம், பயிா்க்காப்பீடு போன்றவை முறையாக வழங்கப்படுவது இல்லை.
இந்நிலையில், நெல் ஈரப்பதம் உயா்த்தி அறிவிக்கப்படாதது, விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என்றாா்.
