ரயில் பாலத்தை உயா்த்திக் கட்ட கோரிக்கை
எட்டுக்குடி அருகே ரயில் பாலத்தை உயா்த்திக் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை- திருத்துறைப்பூண்டி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திருக்குவளை தாலுகா எட்டுக்குடி ஊராட்சி அருகில் ரயில்வே பாலம் சாலையை கடப்பதால் அந்த இடத்தில் கீழ் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் உயரம் சுமாா் 10 அடி மட்டுமே உள்ளது.
ரயில் இயங்கும்போது உள்பாதைவழியாக எட்டுக்குடி, வல்லம், சித்தாய்மூா், ஆலத்தம்படி போன்ற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லவோ, உயரமான வாகனங்கள் செல்லவோ இந்த பாலம் தடையாக உள்ளது.
ஆகவே, ரயில்வே துறை ஆய்வு செய்து இந்த பாலத்தை மாற்றி லாரிகள் மினி பேருந்துகள் செல்லும் வகையில் அமைத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளாா்.

