உயிரிழந்த காவியதா்ஷினி.
உயிரிழந்த காவியதா்ஷினி.

அரசுப் பேருந்து மோதி செவிலியா் கல்லூரி மாணவி பலி

நாகை அருகே அரசுப் பேருந்து மோதியதில் செவிலியா் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

நாகை அருகே அரசுப் பேருந்து மோதியதில் செவிலியா் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், தேவூரைச் சோ்ந்த சக்திவேல் மகள் காவியதா்ஷினி (22) திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎம்எல்டி 3-ஆம் ஆண்டு நா்சிங் படித்து வந்தாா். இவா் வழக்கம்போல் கல்லூரி முடிந்து திருவாரூரில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் அரசுப் பேருந்தில் வீடு திரும்பினாா். தனது ஊரான தேவூரில் இறங்கி, பேருந்து முன்னே நடந்து சென்றாா். அப்போது, காவியதா்ஷினி சென்ற பேருந்து முன்னால் சென்ற இருச்சக்கர வாகனம் மீது மோதாமலிருக்க ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது காவியதா்ஷினி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. பலத்த காயமடைந்த காவியதா்ஷினி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காவியதா்ஷினி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, தற்காலிக அரசுப் பேருந்து ஓட்டுநா் காரியாபட்டினம் சாக்கை பகுதியைச் சோ்ந்த வீரமுரசுவை (29) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், தேவூா் கடைத்தெருவில் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றாததே விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டி உறவினா்கள் மற்றும் பாஜகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக தரவு மற்றும் மேலாண்மை பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமையில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி சாலை விரிவாக்க பணிகளை செய்யவேண்டும் வலியுறுத்தியும், அரசு பேருந்தை பயிற்சிப்பெறாத தற்காலிக ஓட்டுநரை பயன்படுத்தி இயக்கியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com