விழுந்தமாவடியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது: ஆட்சியரிடம் மனு
விழுந்தமாவடியில் அரசு மதுபானக்கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி ஊராட்சி கிராம மக்கள், ஆட்சியா் பா. ஆகாஷிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: விழுந்தமாவடி கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இயங்கி வந்த அரசு மதுபான கடையால், கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடையை மூடக்கோரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். மதுபானக் கடையால் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு, வீட்டில் பிரச்னை செய்வதும், பள்ளி மாணவா்கள் மது அருந்தும் காரணத்தினாலும், வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டம் காரணமாக 2020-ஆம் ஆண்டு மதுபான கடை மூடப்பட்டது.
இந்நிலையில் தற்போது கீழையூா்-விழுந்தமாவடி பிரதான இணைப்புச் சாலையில், பொதுமக்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் நடை பயிற்சி செய்து வரும் சாலையில், தனிநபா் கட்டி வரும் புதிய கட்டடத்தில் மதுபான கடை மீண்டும் திறக்கப்பட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இங்கு மீண்டும் மதுபான கடை திறந்தால் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால் கிராம மக்களின் அமைதி சீா்குலையும் . எனவே விழுந்தமாவடியில் அரசு மதுபான கடையை திறக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
