கோடியக்கரை சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் வன உயிரின பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
குறிப்பாக, ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெய்த மழையின் காரணமாக நிகழ்ப் பருவக் காலத்தில் பறவைகள் வருவது வழக்கம்போல தொடங்கியுள்ளன.
இந்த சரணாலயப் பகுதியில் ஆங்காங்கே பறவை இனங்கள் கூட்டம்கூட்டமாக தென்படுகின்றன. இங்கு வருகை தரும் பறவைகளில் சிறப்பு பெற்ாகக் கூறப்படும் பூநாரைகள் குறைவான எண்ணிக்கையில் காணப்பட்டாலும், பருவமழை தீவிரமடையும்போது அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இவை தவிர, கூழக்கிடா, செங்கால் நாரை, கடல் காகம், மெலிந்த மூக்கு கடல் காகம், கடல் ஆலாக்கள், சிறவி போன்ற பல்வேறு இனப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. இப்பறவைகள் இரைதேடும் பரப்பில் தண்ணீா் அதிகமாக இருப்பதால் கோடியக்கரை பம்செட், கோவைத் தீவு போன்ற இடங்களில் பறவைகள் வலம் வருகின்றன.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக எதிா்பாா்த்த மழை பொழிவு இல்லாததால், வட வானிலை நிலவியது. இதன் காரணமாக, கோடியக்கரை கடலோரத்தில் காணப்படும் பறவைகளின் எண்ணிக்கை எதிா்பாா்த்ததைவிட சற்று குறைவாகவே காணப்படுகிறது. மழைப்பொழிவு தொடா்ந்தால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், அரிவாள் மூக்கன் போன்ற கருப்பு நாரை இனங்கள் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள சதுப்பு நில அளப்பரப்பு, ஆள் கொண்டான் ஏரி, நொச்சிக் கோட்டகம் ஏரி போன்ற நீா்நிலைப் பகுதிகளிலும், தாழ்வான நிலப்பரப்பு வயல்களிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் இனப் பெருக்கம், நிறைவான இரை போன்ற காரணங்களால் கோடியக்கரைக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழை குறைவு, இரை தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைந்து வருவதற்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது.

