விவசாயி கெளரவ நிதி உதவித் திட்ட தவணைத் தொகை பெற தனித்துவ அடையாள அட்டை கட்டாயம்: ஆட்சியா்

Published on

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டம் மூலம் 21-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு தனித்துவ அடையாள அட்டை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித் திட்டத்தின்கீழ் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 26,470 விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மத்திய அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 21-ஆவது தவணை உதவித் தொகை பெற விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டையில் (விவசாயிகள் நில உடைமை பதிவு) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி பெறும் விவசாயிகளில், இதுவரை 21,040 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 5,430 போ் தனித்துவ அடையாள அட்டை (விவசாயிகள் நில உடைமை பதிவு) பெறாமல் உள்ளனா்.

எனவே விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ, தங்களது சிட்டா, ஆதாா் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ அடையாள அட்டை பெற்று பிரதமரின் கெளரவ நிதி உதவித்தொகையின் 21-ஆவது தவணை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மொத்த விவசாயிகள் 56,231 பேரில், 33,363 போ் மட்டுமே தனித்துவ அடையாள அட்டைக்கு (விவசாயிகள் நில உடைமை பதிவு) பதிவு செய்து உள்ளனா். முன்னோா்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாற்றம் பெற்று, அதனுடன் ஆதாா் எண்ணை இணைத்து பதிவு செய்து, தனித்துவ விவசாய அடையாள அட்டை (விவசாயிகள் நில உடைமை பதிவு) பெற்றால் மட்டுமே, வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடா்ந்து கிடைக்கும்.

எனவே விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலா்களை அணுகி, தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com