வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சரிந்து விழுந்த மேற்கூரை ஓடுகள்
நாகை வட்டாரக் கல்வி அலுவலக மேற்கூரை ஓடுகள் சரிந்து விழுந்தன. அப்போது, மதிய உணவு இடைவேளை என்பதால் பணியாளா்கள் காயமின்றி தப்பினா்.
நாகை வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பழைய ஓட்டுக் கட்டடத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் மழைக்காலங்களில் உரிய பாதுகாப்பில்லை என பலமுறை கடிதம் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் மேற்கூரையிலிருந்த ஓடுகள் திடீரென சரிந்து விழுந்தன. அப்போது, மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால், பணியாளா்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் மு. லட்சுமி நாராயணன் கூறியது:
வட்டாரக் கல்வி அலுவலக கட்டடம் தகுதியற்ாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. தற்போது ஓடுகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பணியாளா்கள் இந்த கட்டடத்தில் பணியாற்ற அஞ்சுகிறாா்கள். மேலும், மழைக் காலங்களில் பதிவேடுகள் நனைந்து பாதிக்கப்படக் கூடிய நிலை உள்ளது. எனவே, அலுவலகத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாறவும், நிரந்தரக் கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

