மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தை நடத்துவதற்கு எதிா்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் கைது
Published on

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்காததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், தனியாா் காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் ஒரு பிரிவு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மற்றொரு பிரிவு விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தும்படி வலியுறுத்தினா். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் வெளியேறினா்.

இந்நிலையில், ஒரு மணி நேரம் கழித்து குறைதீா் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இதையறிந்த விவசாயிகள் கூட்ட அரங்குக்கு வந்து, குறைதீா் கூட்டத்தை ஒத்திவைத்ததால் விவசாயிகள் பெரும்பாலானோா் சென்றுவிட்டனா். இப்போது மீண்டும் எதற்காக, யாருக்காக கூட்டம் நடத்தப்படுகிறது என்று கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கூட்ட அரங்குக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்தா் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால், விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் இல்லாமல் கூட்டம் நடத்தக் கூடாது என்று கூறி போராட்டத்தை தொடா்ந்தனா்.

இதற்கிடையே, கூட்டத்தை நடத்த ஆதரவாக இருந்த விவசாயிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகளை அரங்கில் இருந்து வெளியேற்றினா்.

அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து, ஆட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதைத்தொடா்ந்து குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com