கலப்பட நெல் விற்பனை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
கலப்பட விதை நெல் விற்பனை செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு நெற்பயிா்களுடன் வந்து விவசாயிகள் புகாா் அளித்தனா்.
வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கத்தின் செயலா் ஒளிச்சந்திரன் தலைமையில் அழுகிய நெற்கதிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து புகாா் அளித்தனா்.
புகாரில், வேதாரண்யம் வட்டம் தகட்டூா் வருவாய் சரகத்தில் உள்ள விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்துக்கு தகட்டூா் கடைத் தெருவில் இயங்கிவரும் தனியாா் நிறுவனத்தில் இருந்து, ஏ.டி.டி. 51 என்ற விதை நெல்லை வாங்கி வயலில் விதைத்தோம். சுமாா் 120 நாட்களில் கதிா் வரவேண்டிய பயிா் 60 நாட்களில் வர ஆரம்பித்து விட்டது. மேலும் பாதி கதிா் வந்தும் பாதி கதிா் வராமலும் இருந்ததால், கலப்பட விதை நெல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை அணுகி, நெற்பயிரை பாா்வையிட்டு விதை நெல் உற்பத்தி செய்த நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு வாங்கித் தர வலியுறுத்தினோம். ஆனால், அவா் அலட்சியமாக பதில் அளிக்கிறாா்.
இதுகுறித்து டிசம்பா் 26-ஆம் தேதி உரிய துறை சாா்ந்த அலுவலா்களிடம் மனு அளித்துள்ளோம். இதையடுத்து ஜனவரி 3-ஆம் தேதி வேளாண் துறை அலுவலா்கள் அடங்கிய குழு, வயலில் ஆய்வு செய்து, 80 சதவீதம் பாதிப்பு என்றும், கலப்பட விதை நெல் என்றும் தெரிவித்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம், கலப்பட விதை நெல்லை உற்பத்தி செய்த நிறுவனத்தில் கலப்பட விதைகள் இருப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கலப்பட நெல்லை விதைத்து, ஒரு ஆண்டு மகசூலை இழந்து பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து தகுந்த இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

