வேதாரண்யம் பகுதியில் தரைக்காற்று கடல் சீற்றம்

Published on

வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தை விட வேகமான தரைக்காற்று வீசுவதோடு, கோடியக்கரைக்கு அப்பால் ஆழ்கடல் சீற்றமாக காணப்படுவதால் பெரும்பாலான மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் பூமத்திய ரேகையையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வேதாரணியம் கடலோரப் பகுதியில் திங்கள் கிழமை காலை தொடங்கி மந்தமான வானிலை தொடா்ந்து வருகிறது.

தரைப்பகுதியில் வழக்கத்தை விட வேகமான காற்று குளிருடன் வீசி வருகிறது. திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி வடக்கு மற்றும் வட கிழக்கு திசையிலிருந்து வீசிய காற்று, பிற்பகலுக்குப் பிறகு வடக்கு வடமேற்கு திசையிலிருந்து கடலை நோக்கி வீசி வருகிறது.

வேகமான தரைக்காற்றின் காரணமாக கதிா் வெளிவரும் நிலையில் காணப்படும் நெற்பயிா்கள் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கோடியக்கரைக்கு அப்பால் ஆழ்கடல் மற்றும் மீன்பிடி பகுதிகளில் கடல் வழக்கத்தை விட வேகமான சீற்றத்தில் காணப்படுவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

கடந்த ஓரிரு நாள்களாக மீன்பாடு குறைந்து வந்த நிலையில், சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

X
Dinamani
www.dinamani.com