மாநில கடற்கரை கைப்பந்து போட்டி பரிசளிப்பு

நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Updated on

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாகையில், மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாரதியாா் தினம், குடியரசு தினத்தையொட்டி இப்போட்டி நடைபெற்றன. முன்னதாக, மாவட்ட அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோா் பிரிவுகளின்கீழ், அந்தந்த மாவட்டங்களில் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.

இதில் சிறப்பிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றன. தொடா்ந்து, நாகை புதிய கடற்கரையில் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. முதல் கட்டமாக மாணவிகளுக்கான போட்டிகள் ஜனவரி 22, 23-ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, மாணவா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை, ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இருந்து 780 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நாகை புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழ்நாடு கடற்கரை கைப்பந்து கவுன்சில் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட சங்கத் தலைவா் மோகன்தாஸ் பரிசுகள் வழங்கினாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணன், மாவட்ட சிலம்பாட்ட சங்கத் தலைவா் ஆல்பா்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

14 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் திருநெல்வேலி அணி முதலிடத்தையும், ராமநாதபுரம் அணி இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

17 வயதிற்கு உட்பட்டோா் பிரிவில் மயிலாடுதுறை அணி முதலிடத்தையும், நாகை அணி இரண்டாம் இடத்தையும், ஈரோடு அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூா் ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com