கடற்கரையில் ஆமை முட்டைகளுக்கு பாதுகாப்பு
நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில், ஆமை முட்டைகளை இயற்கையான முறையில் பாதுகாக்கும் பணி தொடங்கியது.
நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் குறிப்பிட்ட பருவ காலங்களில் முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்குச் சென்று விடும். இந்த முட்டைகளை பறவைகள், நாய்கள் உள்ளிட்டவை உண்டு விடும்.
இதனால் கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இட்டுச்செல்லும் முட்டைகளை வனத்துறையினா் மற்றும் கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் ஆகியோா் பாதுகாப்பாக சேகரித்து, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க வைக்கின்றனா். பின்னா் அந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டுவிடுகின்றனா்.
இந்நிலையில், முதல்முறையாக ஆமை முட்டைகளை அவை உள்ள இடத்திலேயே இயற்கையாக பாதுகாக்கும் பணி நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி வழிகாட்டுதலின்படி, வனச்சரக அலுவலா் சியாம்சுந்தா் , உயிரியலாளா் அறிவு , வனக் காப்பாளா் உலக நாதன், இளநிலை உதவியாளா் சிவபெருமாள், வேட்டை தடுப்புக் காவலா் வினோத், ஆமை முட்டை சேகரிப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகளை இயற்கை முறையில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

