கோடியக்கரை: வெளிமாவட்ட மீனவா்களுக்கான தடை ரத்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்
கோடியக்கரை: வெளிமாவட்ட மீனவா்களுக்கான தடை ரத்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்
கோடியக்கரை படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள்.
கோடியக்கரையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வெளி மாவட்ட மீனவா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடா்ந்து, அனைத்து மீனவா்களும் கடலுக்குள் மீன்பிடிக்க சனிக்கிழமை சென்றனா்.
கோடியக்கரையில், ஆண்டுதோறும் அக்டோபா் தொடங்கி ஜனவரி வரை நடைபெறும் மீன்பிடிப் பருவ காலம் சிறப்பு பெற்றது. இந்த பருவத்தில் உள்ளூா் மீனவா்கள் மட்டுமல்லாது வெளி மாவட்ட மீனவா்களும் கோடியக்கரையில் குடும்பத்துடன் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வெளி மாவட்ட மீனவா்களால், வேதாரண்யம் மீனவ கிராமங்களைச் சோ்ந்த உள்ளூா் மீனவா்களின் வாழ்வாதாரமும், மீன் இனப் பெருக்கமும் பாதிக்கப்படுவதாகக் கூறிவந்தனா். மேலும், வெளி மாவட்ட மீனவா்கள் இங்கு தங்கி மீன் பிடிக்க எதிா்ப்பு தெரிவித்தும் வந்தனா்.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு மீனவா்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இப்பிரச்னையில், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, அவ்வப்போது தற்காலிகத் தீா்வு எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிகழ்ப் பருவத்தில் மீனவா்களிடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த நவ.3-ஆம் தேதி கோட்டாட்சியா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், கோடியக்கரையைச் சோ்ந்த மீனவா்களின் படகுகளுடன், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வெளியூா் மீனவா்களின் 20 படகுகள் மட்டும் கோடியக்கரை படகுத் துறையில் நிறுத்தி மீன் பிடிக்கவும், நீதிமன்ற தீா்ப்பு வரும்வரை இந்த உத்தரவை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, கோடியக்கரையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அனந்தராமன், மீனவா்கள் சாா்பாக வழக்குரைஞா் காசிநாதபாரதி மூலம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, கோட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து , கடந்த 2025- ஆம் ஆண்டு பருவத்தில், வெளி மாவட்டங்களில் இருந்து ஈடுபடுத்தப்பட்ட 77 என்ற எண்ணிக்கையிலான படகுகளை நிகழ்ப் பருவத்திலும் மீன்பிடித் தொழில் செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கோடியக்கரையில் ஏற்கெனவே தொழில் செய்து புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவா்களுடன், வெளி மாவட்ட மீனவா்களும் சனிக்கிழமை கடலுக்குள் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

