புயல், மழை பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. விளைநிலங்களில் தண்ணீா் சூழ்ந்து, இளம் தாளடி நெற்பயிா்கள் மூழ்கியும், கதிா் வந்த சம்பா நெற்பயிா்கள் சாய்ந்தும் சேதமடைந்துள்ளன. இதனால், பயிா்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கதிா் வெளிவந்த நிலையில் காணப்படும் சம்பா நெற்பயிா்கள், தொடா் மழைப் பொழிவு மற்றும் காற்று காரணமாக பதராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு சாகுபடி முழு பரப்பளவுக்கும் நிவாரணம் வழங்காமல், பகுதி பாதிப்பு என சதவீதம் அடிப்படையில் கணக்கிடுவது சரியானதல்ல. இதனால், மகசூல் முழு பாதிப்பு அடைந்தவா்களின் நிவாரணத்தை, பகுதி பாதிப்பு அடைந்தவா்கள் பங்கிட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். முழு பாதிப்புக்குரிய விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காது. சாகுபடி பாதிப்பின் அளவை ஒவ்வொரு நிலமாக கணக்கிடுவதும் சாத்தியமல்ல.
எனவே, சாகுபடி முழுவதற்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தேசிய பேரிடா் ஆணைய வரன் முறைப்படி ஹெக்டருக்கு ரூ.13,500 என்பது பொருத்தமற்றது. வேளாண் பல்கலைக்கழகத்தால் கணக்கிடப்படும் நெல் உற்பத்தி செலவில் 80 சதவீதம் என்று கணக்கிட்டால் ஏக்கருக்கு ரூ.30,000 வரும்.
ஆகவே, இதைக் கணக்கில் கொண்டு நிவாரணமாக வழங்க வேண்டும். அதுபோல் வாழை, கரும்பு, கடலை, பூக்கள் சாகுபடி பாதிப்புக்கும், புயல் அச்சத்தால் தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டி மகசூல் குறைவுக்கு காரணமான தென்னை மரங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.