பெட்ரோல் விலை குறைப்பு கண்துடைப்பு நாடகம்

பெட்ரோலிய பொருள்களின் விலையை பல மடங்கு அதிகரித்துவிட்டு, கலால் வரியைக் குறைப்பது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.

பெட்ரோலிய பொருள்களின் விலையை பல மடங்கு அதிகரித்துவிட்டு, கலால் வரியைக் குறைப்பது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது :

விமானத்துக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72-க்கு வழங்கப்படுகிறது. ஆனால் சாமானிய மக்கள் பயன்படுத்துகிற பெட்ரோலின் விலை ரூ.105-க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு நாடகம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததற்கு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யாததே காரணம்.

விடுபட்ட கிராமங்களுக்கு உடனடியாக பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழையால் தாளடி பயிா்கள் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இதேபோல, நவம்பா் 15-ஆம் தேதிக்குள் தாளடி, சம்பா பயிா்களை, காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் அறிவித்திருக்கிறாா். இந்தக் கால அவகாசத்தை இந்த மாத இறுதிவரை நீட்டித்து, விவசாயிகள் பிரீமியம் செலுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை ரயில்வே துறை தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது, நாகை- வேளாங்கண்ணி வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான ரயில் போக்குவரத்துக்கு ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த பணி கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதேபோல, திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பா்கள் நியமிக்கப்படாததால், இங்கு அகலப்பாதை அமைத்தும் பயனில்லை. நிறுத்தப்பட்ட காரைக்குடி- சென்னை கம்பன் ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com