குறைந்த செலவில் சிறந்த தொழில்நுட்பம்
By DIN | Published On : 02nd July 2021 12:00 AM | Last Updated : 02nd July 2021 12:00 AM | அ+அ அ- |

குறைந்த செலவில் சிறு முயற்சியுடன் கூடிய சிறந்த தொழில்நுட்பத்தைக் கையாண்டால், குறுவை பருவத்தில் கூடுதல் மகசூல் பெறலாம் என வலங்கைமான் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நடப்பு குறுவை பருவத்தில் நேரடி விதைப்பு செய்து வரும் விவசாயிகள், விதை நோ்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும். இதன்மூலம் நெற்பயிரை நோய் தாக்காமல் பாதுகாக்கலாம். நெல் விதை நோ்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் தேவை. அதாவது ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை அதற்குரிய சூடோமோனாஸ் உயிா் பூஞ்சான மருந்துடன் கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து விதைப்பு செய்யவும். அதிகபட்சமாக நோ்த்தி செய்த விதைகளை 30 நாள்கள் வரை வைத்திருக்கலாம். நோ்த்தி செய்த நெல் விதைகளை விதைப்பதன் மூலம் குலை நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் வாடல் நோய் போன்றவை வராமல் தடுக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.