அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் மறியல்
By DIN | Published On : 08th February 2022 11:58 AM | Last Updated : 08th February 2022 11:58 AM | அ+அ அ- |

ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து மறியலில் ஈடுப்படும் விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஒரத்தூரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
தற்பொழுது, ஒரத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தாளடி நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனைசெய்வதற்காக ஒரத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து நூற்றுக்கணக்கான மூட்டைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
ஆனால் ,அரசு நேரடி கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை வரை திறக்கப்படாததை அடுத்து. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் சௌந்தரராஜன், ஊராட்சி முன்னாள் தலைவர் கரிகாலன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடி முத்துப்பேட்டை பிரதான சாலை ஒரத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் நடுவில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடனடியாக ஒரத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளைதுரை, கலப்பால் காவல் ஆய்வாளர் சரசு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மாவட்ட அலுவலர்களுடன் தொலைப்பேசியில் பேசி விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் பேசிய காவல்துறையினர் இன்று செவ்வாய்க்கிழமை ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் எம். செந்தில்நாதன்,கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...