திருவாரூரில் வீடு எரிந்து மூதாட்டி பலி
By DIN | Published On : 18th July 2022 10:40 AM | Last Updated : 18th July 2022 10:40 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
திருவாரூரில் திங்கள்கிழமை அதிகாலை வீடு எரிந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார்.
திருவாரூர் மாவட்டம், கீழக்காவாதுக்குடி ஊராட்சிக்குட்பட்ட டோல்கேட் பகுதியில் வசிக்கும் முருகன் மனைவி மல்லிகா (60). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவருடைய பேரன் தனுஷ் என்பவரும் தங்கி உள்ளார். இதனிடையே தனுஷ் ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மல்லிகா தனது குடிசை வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். திங்கட்கிழமை அதிகாலை மின் கசிவு காரணமாக அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க- அதிமுக அலுவலக வன்முறை: ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மல்லிகா கதவை உள்பக்கம் பூட்டு போட்டிருந்ததால் வெளியே வர முடியாமல் தீயில் கருகி பலியானார். இதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டி தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.