மேக்கேதாட்டு அணை விவகாரம்: மன்னார்குடி,கோட்டூரில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) சார்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது.
மன்னார்குடி கீழ பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
மன்னார்குடி கீழ பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.


மன்னார்குடி: கர்நாடக அரசு அந்த மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிதாக அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனுமதி கோரியுள்ளதை கண்டித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) சார்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது.

கர்நாடக அரசு அந்த மாநிலத்தில் காவிரி நீராதாரப் பகுதியான மேக்கேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனுமதி கோரியுள்ளதை கண்டித்தும், இதற்காக ரூ.5300 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதை எதிர்த்தும், மத்திய அரசு எக்காரத்தை கொண்டு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும், குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருவதை பாதுகாத்திட ஆறுகளில் முறைவைக்காமல் தேவையான அளவு தண்ணீர் திறந்து விட தமிழக அரசை வலியுறுத்தியும்,தண்ணீர் ஓட்டத்தை தடுக்கும் வகையில் ஆறுகள்,வாய்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட காட்டுச் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன், ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு காவிரியிலிருந்து திறந்து விடப்பட வேண்டிய 40.25 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட வேணடும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
மன்னார்குடி கீழப்பாலத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றியத் தலைவர் ஏ.ராஜேந்திரன், நகரத் தலைவர் எம்.பி.ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோட்டூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

சிபிஐ மாவட்டச் செயலர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலர் ஆர்.வீரமணி, இளைஞர் மன்ற ஒன்றியச் செயலர் துரை.அருள்ராஜன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் ஆர்.சதாசிவம், நகரச் செயலர் வி.எம்.கலியபெருமாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொணடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதே போன்று, கோட்டூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டூர் கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, கோட்டூர் ஒன்றியக்குழுத் தலைவர் மு.மணிமேகலை, சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன், விவசாய சங்க ஒன்றிய துணைச் செயலர் எஸ்.பிச்சைக்கண்ணு, விதொச ஒன்றிய செயலர் எஸ்.சிவசண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோட்டூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட திருப்பத்தூர் விவசாய சங்க ஒன்றியச் செயலர் பி.சௌந்தரராஜன் தலைமையிலும், ஒரத்தூரில் ஒன்றியத் தலைவர் கே.எம்.அறிவுடைநம்பி தலைமையிலும் மற்றும் தட்டாங்கோயில்,பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, திருமக்கோட்டை, சேந்தங்குடி ஆகிய இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

9 இடங்களிலும் சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாய சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com