மன்னார்குடி: பள்ளி பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலி
By DIN | Published On : 17th August 2023 12:31 PM | Last Updated : 17th August 2023 12:31 PM | அ+அ அ- |

சாலை விபத்தில் உயிரிழந்த கூலித் தொழிலாளி கா.ஆறுமுகம்
மன்னார்குடி: மன்னார்குடியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபர்லயம் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து மகன் ஆறுமுகம் (30). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (24). இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவர். இருவரும் மன்னார்குடியிலிருந்து ஒரத்தநாடு செல்லும் சாலையில் வேலைக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஒரத்தநாடு சாலை மேல நாகை தெற்கு நத்தம் என்ற இடத்தருகே சென்றபோது, அவ்வழியே வந்த மன்னார்குடி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சதீஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மன்னார்குடி சேர்ந்த டி. ராஜ் (66) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...