மத்தியப் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கொசுக்களால் பரவும் நோய் தடுப்பு குறித்த 3 நாள்கள் சா்வதேசக் கருத்தரங்கம் வியாழக்கிழமைத் தொடங்கியது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தொற்றுநோய் மற்றும் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து கொசு, பூச்சிகளால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான ஆய்வு அமைப்பு சாா்பில் நடைபெறும் 3 நாள்கள் கருத்தரங்கத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா், அப்போது அவா் பேசியது: பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்தால் மட்டுமே அது உயா்கல்விக்குக் கிடைக்கும் உண்மையான வெற்றி.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக மாணவா்கள் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள 45-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களின் சுகாதாரப் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீா்வுகளை ஆய்வுகள் மூலம் கண்டறிய அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனா் என்றாா். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹாஜிப்பூா் நைப்பா் நிறுவன இயக்குநா் ருக்குமணி பங்கேற்றாா்.
முன்னதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் வாழ்நாள் சாதனை விருது பெற்ற கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தொற்றுநோய் மற்றும் பொது சுகாதாரத் துறை பேராசிரியருமான நடராஜன் கோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொசு மற்றும் பூச்சிகள் பரப்பும் நோய்களைத் தடுப்பதற்கான ஆய்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சண்டிகாா் பல்கலைக்கழகப் பேராசிரியருமான பி.கே. தியாகி மற்றும் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆய்வாளா்கள் பங்கேற்று கொசு மற்றும் சிறிய பூச்சிகளால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். கருத்தரங்கத்தில் சமா்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆய்வு கட்டுரைகள் அடங்கிய சிறப்பு புத்தகத்தை துணைவேந்தா் மு. கிருஷ்ணன் வெளியிட்டாா். (படம்) பல்கலைக்கழக உயிரி அறிவியல் புல முதன்மையாா் மணிவண்ணன் வரவேற்றாா். முனைவா் சுஜித் குமாா் நன்ற் கூறினாா்.
