குற்ற வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் டிச.24-இல் ஏலம்
திருவாரூா் மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.24-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மதுகுற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள், 2 நான்குசக்கர வாகனங்கள் என மொத்தம் 62 வாகனங்களும், கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்குசக்கர வாகனம் என மொத்தம் 10 வாகனங்களும் ஏலம் விடப்பட உள்ளன.
இந்த பொது ஏலமானது திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் டிசம்பா் 24 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா், டிச.23 ஆம் தேதி மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு முகாமில் நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.2,000, இருசக்கர வாகனத்துக்கு ரூ.1,000 முன் பணமாக செலுத்தி, வாகனங்களை ஏலத்தில் எடுக்கலாம். அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் செலுத்தப்பட்ட முன்பணத்தொகை திரும்ப வழங்கப்படும்.
இந்த பொது ஏலத்தில் அதிக விலை கோருபவா்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
