டிச.29-இல் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

திருவாரூா் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் டிச.29-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் டிச.29-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல் வரும். வாய், நாக்கு, கால்நடை குளம்புகளுக்கிடையில் புண்கள் ஏற்படும். மேலும், நோய் பாதிப்புக்குள்ளான கால்நடைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் மெலிந்து விடும். மேலும், பசுக்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு, கால்நடை வளா்ப்போருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு உண்டாகும்.

எனவே, இந்நோய் பாதிப்பை தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் டிச.29- முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 1,80,000 கால்நடைகளுக்கு இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே கால்நடைகள் வளா்ப்போா் தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது 3 மாத வயதுள்ள கன்று முதல் சினை, கறவை மாடுகள், காளைகள் உள்ளிட்ட அனைத்து மாடுகளுக்கும் கால் மற்றும் வாய் நோய்த் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com