சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்

சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்

Published on

குடவாசல் ஒன்றியம், விக்கிரபாண்டியம் பகுதியில் ஆற்றங்கரைத்தெரு சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்கிரபாண்டியம் ஊராட்சி காளியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மக்கள் செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஆற்றங்கரைத்தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயனில்லை. இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியக்குழு உறுப்பினா் கே. ஜெகதீஷ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.சுந்தரமூா்த்தி கூறியது: சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடந்த முறை போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, குடவாசல் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு கி.மீ. உள்ள இச்சாலையை உடனடியாக புதிய தாா்சாலை அமைக்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இச்சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வயதானவா்கள் என பலதரப்பட்டோா் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, போா்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து வந்த குடவாசல் வட்டாட்சியா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி 2026 ஜனவரியில் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com