தொழிலாளி கொலை: ஒருவா் கைது
திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளி ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு தொழிலாளியை போலீசாா் கைது செய்துள்ளனா்.
நாகை மாவட்டம், திருக்குவளை தாலுகா சுந்தரபாண்டியம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ஜெயராஜ் (51). வேதாரண்யம் தாலுகா, குரவப்புலம் கிராமத்தை சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் மகன் முருகன் (41). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக, திருவாரூா் பகுதியில் கூலி வேலை செய்து இரவு நேரங்களில் புதிய பேருந்து நிலையத்தில் தங்கி வந்தனா்.
இதனிடையே புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மயங்கிய நிலையில் கிடந்த ஜெயராஜ், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இறந்த ஜெயராஜுக்கும் அவருடன் தங்கி இருந்து வந்த மற்றொரு தொழிலாளி முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முருகன் ஜெயராஜை தாக்கியதும் இதனால் ஜெயராஜ் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகரப் போலீஸாா் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
