மன்னாா்குடியில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிய அரசு மகளிா் கல்லூரி தொடக்கம்: அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள்!
நமது நிருபர்
மன்னாா்குடி: மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் புதிய மகளிா் கல்லூரி செயல்படும் என தகவல் வெளியாகியதால் கலக்கத்தில் பெற்றோர்களும் குழப்பத்தில் மாணவிகளும் உள்ளனர்.
கடந்த 1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது அதில் அமைச்சராக இருந்த மன்னார்குடியை சேர்ந்த ப.நாராயணசாமி முயற்சியால் மன்னார்குடி வ.உசி.சாலையில் ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ராஜகோபாலசாமி அரசுக் கலை அறிவியல் கல்லூரியை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தற்போது, இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை, அய்வியல் அறிஞர் படிப்புகள் உள்ளது. மாணவ, மாணவிகள் என மொத்தம் 3600 பேர் படிக்கின்றனர். 120 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். காலை ,மதியம் என இருவேலை ஷிப்ட் முறையில் நடைபெறுகிறது.
மன்னார்குடியில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது வந்தது. தொகுதி எம்எல்ஏவும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முயற்சியால், முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழாண்டு மன்னார்குடியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், நவம்பா் மாதம் துவங்க உள்ள புதிய மகளிா் கல்லூரிக்கு செப்டம்பா் மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதில், பி.எஸ்சி., கணினி அறிவியல், நுண்ணுரியல், பிசிஏ கணினிப் பயன்பாட்டியல், பிகாம் வணிகவியல், பிஏ வரலாறு ஆகிய 5 பாடப்பிரிவுகள் இடம் பெறும் எனக் கூறினாா்.
இதனையடுத்து, இதனையடுத்து,முதல் கட்டமாக,அரசு ராஜகோபாலசாமி கல்லூரியில் ஒரு அறை மகளிர் கல்லூரிக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.இதனை தொடர்ந்து, அடுத்த கட்டமாக பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட்டார். மேலும், 7 பேராசிரியா்கள், 5 அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
புதிய அரசு மகளிர் கல்லூரி, நவம்பர் இறுதி வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அழைப்பாணை அனுப்பி சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இம்மாதம் இறுதியில் மற்ற கல்லூரிகளில் முதலாம் பருவத்தேர்வுகள் தொடங்க இருப்பதால், இந்த கல்லூரியில் இந்தமாதம் இறுதியில்தான் கல்லூரியே தொடங்குவதால். காலையில் முதலாம் பருவ பாடத்திற்கும், மதியம் இரண்டாம் பருவ பாடத்திற்கு வகுப்பு நடத்தி இரண்டு பருவத்தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மன்னார்குடி நகரப் பகுதியில் புதிய அரசு மகளிர் கல்லூரி எங்கு தொடங்கப்படும் என உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், முதலில் ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரில் உள்ள கட்டடத்தில் என்றும், பின்னர், கல்லூரி சாலைக்கு சற்று முன்பாக இருக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பூமாலை வணிக வளாக கட்டடத்தின்(தற்போது 80 சதவீதம் வணிக வாளாகம் செயல்பாட்டில் இல்லை) முதல் தளத்தில் என்றும், மேலவாசல் அரசு ஆசிரியர் பயற்சி நிறுவன வளாகத்தில் என கூறப்பட்டு வந்தது .பின்னர், அந்த இடங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன், திங்கள்கிழமை தனது முகநூல் பதிவில், மன்னார்குடி நடசேன் தெருவில் ரூ.46.46 கோடியில் புதிதாக கட்டப்பட்டு அண்மையில் திறப்புவிழா கண்ட பெருந்தலைவர் காமராஜர் நகராட்சி பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள விழா அரங்கம் மற்றும் அதன் எதிரே வணிக வளாகத்தின் முதல் தளத்தில் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிா் கல்லூரி அமைய இருப்பதை ஆய்வு செய்ததாக பதிவிட்டிருந்தாா்.
இதனையடுத்து, பல்வேறு தரப்பினர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்து இயக்கப்படும் இடத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்திலும், 200-க்கும் மேற்பட்டவணிக நிறுவனங்கள் செயல்படும் இடத்திலும் புதிய அரசு மகளிா் கல்லூரி தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நடத்தக் கூடாது என கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிா்ப்புத் தெரிவிக்கப்பவிட்டு வருவதுடன், நாளிதழ்கள், காட்சி ஊடகங்களில் செய்தியாளர்களிடம் உண்மை தன்மை குறித்து கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் கேட்பதும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து, விசாரித்த வகையில் பேருந்து நிறுத்தத்தின் முதல் தளத்தில் அரசுக் கல்லூரி தொடங்கும் முடிவு கைவிட்டு பேருந்து நிலைய வளாகத்தின் அருகே உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அரசுக் கல்லூரி தற்காலிகமாக தொடங்குவது உறுதியாகி அதற்கான ஒப்பந்தப் பணிகள் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமைதியான இடத்தில் புதிய அரசு மகளிர் கல்லூரியை தொடங்காமல் 250-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகள், ஏராளமான தரைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் என எங்கு பார்த்தாலும் கடைகள், மக்கள் கூட்டம் என காட்சி அளிப்பதுடன் பாதுகாப்பு இன்மை, இடப்பிரச்னை, கல்வி நிலையத்திற்கான கட்டட அமைப்பு இல்லாதது, பேருந்துகளால் எழுப்பப்படும் சத்தம் பொதுமக்கள், பயணிகள் நடமாட்டம் ஆகியவற்றால் கவனச்சிதறல்களுக்கு மத்தியில் எப்படி ஆசிரியர்களால் பாடம் கற்பிக்க முடியும், பிள்ளைகள் எப்படி பாடத்தில் கவனம் செலுவத்துவார்கள் என்ற கலக்கத்தில் பெற்றோர்களும், குழப்பத்தில் மாணவிகளும் உள்ளனர்.
எனவே, காலம் கடத்தாமல் பேருந்து நிலையத்திற்குள் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிா் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் வரை எந்த பிரச்னையும் எழாதவகையில் தற்காலிகமாக இயக்கிட மாற்று இடத்தினை உடனடியாக தோ்வு செய்து கல்லூரி தொடங்கிட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் ஒரே குரலாக உள்ளது.

