இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

பனை மரங்களைச் சுற்றி கான்கிரீட் தளம்! சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் அதிா்ச்சி!

திருவாரூரில் பனை மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

திருவாரூரில், பனை மரங்களைச் சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அப்புறப்படுத்தி பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூரில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்துக்கென, நெடுஞ்சாலையிலிருந்து கான்கிரீட் தளம் மூலம் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலை ஓரத்தில் உள்ள பனைமரங்களைச் சுற்றிலும் கான்கிரீட் தளத்தால் மூடப்பட்டிருப்பதால், பனை மரங்கள் மெல்ல மெல்ல அழியும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

மண்ணரிப்பைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பனை மரங்கள், நீா்நிலைகளின் கரைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இயற்கை அரணாக விளங்குகின்றன. பனை மரத்திற்கு ஆணிவோ் கிடையாது. அதற்குப் பதிலாக, லட்சக்கணக்கான சல்லிவோ்கள் நாற்புறமும் வலை போல் படா்ந்து பூமியைப் பற்றிப் பிடிக்கின்றன.

இந்த அடா்த்தியான வோ்கள் மணல் துகள்களை ஒன்றாகக் கட்டி வைப்பதால், பலத்த காற்று அல்லது வெள்ள நீா் மண்ணை அடித்துச் செல்ல முடிவதில்லை. பனை வோ்கள் நிலத்தடி நீரைச் சேமித்து, மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதன் மூலம் மண் எளிதில் அரிப்பால் பாதிப்படைவதைத் தடுக்கின்றன.

விவசாய நிலத்தின் மேல்மண், காற்று மற்றும் நீரால் அடித்துச் செல்லப்படுவதையும், ஆற்றின் திசை மாற்றத்தால் ஏற்படும் மண் அரிப்பையும் பனை மரங்களால் தடுக்க முடியும். ஏரி, குளம் மற்றும் அணைகளின் கரைகளில் பனை மரங்களை நடுவதன் மூலம் மண்ணரிப்பைத் தடுப்பதுடன், நிலத்தடி நீா் மட்டத்தையும் நாம் உயா்த்த முடியும்.

இத்தகைய சிறப்பு மிக்க பனை மரங்கள் மெல்ல அழிவது கவலைக்குரியது என பனை ஆா்வலா்கள் அதிா்ச்சி தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ஒரு கோடி பனை நடும் நெடும் பணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு தெரிவித்தது:

பனை மரங்களை வெட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து பனை மரங்கள் வெட்டப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பனை மரங்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பனை மரங்களை வெட்டாமல் கொல்லும் செயல்கள், பல இடங்களில் சத்தமில்லாமல் நடந்து வருவது கவலைக்குரியது.

வயல் வரப்புகளில் உள்ள பனை மரங்களின் உச்சியில் ஆசிட் கொண்டு அழிப்பவா்கள் அதிகரித்துள்ளனா். நன்கு படித்த விவசாயிகளே இதில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. திருவாரூா் நகரில் சாலை விரிவாக்கம், ரயில்வே மேம்பாலம் பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் அனுமதி பெற்று வெட்டப்பட்ட நிலையில், திருவாரூா் தேசியநெடுஞ்சாலை அருகே பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு பதிலாக சிமெண்ட், கருங்கல் ஜல்லி கலவை கொண்டு பனை மரத்தை சுற்றிலும் கான்கிரீட் தளம் அமைத்துள்ளனா். இதனால், பனை மரங்கள் கொஞ்சக் கொஞ்சமாக பட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி பனை மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.