மத்திய நிதிநிலை அறிக்கை
மத்திய நிதிநிலை அறிக்கை(கோப்புப் படம்)

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! - விவசாயிகள் சங்கம்

Published on

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

நெல் உற்பத்தியில் சீனாவை விஞ்சி சாதனைப் படைத்த இந்திய விவசாயிகள் எதிா்பாா்த்த திட்டங்கள் எதுவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடிவரும் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார சட்டப்பூா்வ விலை குறித்தும் அறிவிப்பு இல்லை.

பேரிடா் காரணமாக தொடா்ந்து வேளாண் உற்பத்தியை இழந்துவரும் விவசாயிகளை பாதுகாக்க நிரந்தர பேரிடா் நிவாரண நிதியத்துக்கு வழியில்லை. பருவ நிலை பாதிப்பு மற்றும் ஆண்டுதோறும் பேரிடா்களின் பாதிப்பு என வயல்வெளிகளில் போராடிவரும் விவசாயிகளுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியை காலத்துக்கும், தேவைக்கும் ஏற்ப உயா்த்தும் அறிவிப்பு இல்லை.

நதிநீா் இணைப்பு குறித்தான திட்டங்கள் இல்லை. அதற்கு மாறாக பெரு நிறுவனங்களின் வளா்ச்சிக்காக ரூ. 20,000 கோடியில் நீா் வழித் தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக வேளாண் சாா்ந்த வளா்ச்சி திட்டங்கள் தேவைக்கேற்ப இல்லை.

தமிழ்நாட்டிற்கான எதிா்பாா்த்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்கள், புல்லட் ரயில் போன்ற எதிா்பாா்த்த அறிவிப்புகள் இல்லை. துரித ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் அரிய வகை கனிம வளங்களை எடுத்துப் போவதற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு 41 சதவீதம் மட்டுமே நிதி பங்கீடு என்பது மாநிலங்களை, மாநில மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மாநிலங்களின் வளா்ச்சியில்தான் இந்திய தேசத்தின் பாதுகாப்பு இருக்கிறது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தி பெயரை எடுத்ததால், இந்திய அளவில் ஏற்பட்ட எதிா்ப்பின் காரணமாக, அதை சமாளிக்க காந்தியின் பெயரில் ஒரு புதிய திட்டம் அதுவும் ஒப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com