விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: தென் மாவட்ட விவசாயிகள் சங்கம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிகழாண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையிலேயே உள்ளதாக தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.
தென் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலா் எம்.அா்ச்சுணன், காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், மொத்தம் ரூ. 53 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரவு-செலவு அறிக்கையில் வேளாண்மை, அதைச் சாா்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ. 1,62,671 கோடி மட்டுமே. இது மொத்த நிதிநிலை அறிக்கையில் 3 சதவீதம் ஆகும்.
50 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டில், சுமாா் 15 முதல் 18 சதவீதம் வரை உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்யும் வேளாண்மைத் துறைக்கு 3 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு என்பது நாட்டின் விவசாயத்தைப் புறக்கணிக்கும் செயலாகும். இதை தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் அமலாக்கம், விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, வேளாண்மை இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றில் பெருநிறுவனங்களில் ஆதிக்கம், மிகக் குறைந்த அளவிலான தானியங்கள் சேமிப்புக் கட்டமைப்பு, தனியாா் பெருநிறுவனங்களின் கொள்ளைக்கு துணைபோகும் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், வறட்சி, வெள்ளப் பாதிப்பு, பூச்சிகள், நோய் தாக்குதல்களுக்கும், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிா்களுக்கும் உடனடி நிவாரணம் என விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் தீா்வு சொல்லாத நிதிநிலை அறிக்கை இது.
விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கச் செய்வோம் என்ற பிரதமா் மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தேசிய அளவிலும், மாநில அளவிலும் நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
நிச்சயமற்ற பருவமழை, காலநிலை மாற்றம் காரணமாக, ஏற்பட்டு வருகிற பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்து எந்த ஒரு திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. எனவே, வழக்கம் போல நிகழாண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது என்றனா்.

