தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம்
தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இருக்கிறது என விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மத்திய அரசின் பட்ஜெட்டும், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டும் சிறிதும் வித்தியாசமில்லாமல் விவசாயிகளை ஏமாற்றியுள்ளன. விவசாயிகளின் நலன் கருதி வேளாண் கடன் தள்ளுபடித் திட்டம், பால் கொள்முதல் விலை உயா்வு, சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100, கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம், அனைத்து நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம், கல்லணைக் கரையில் இயற்கை வேளாண் அறிஞா் கோ. நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயிகளின் கோரிக்கைகள் எல்லாம் பரிசீலிக்கப்படாததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன்:
மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கை காரணமாக குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காததால், தமிழகத்திலுள்ள விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். எனவே, விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்தால் ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவா். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: விவசாயிகளுக்கு கூடுதலாக எந்தத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கவில்லை. தூா் வாரும் பணிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எதிா்பாா்த்த நிலையில், முக்கியத்துவம் தரப்படவில்லை. வேளாண் நிதிநிலை அறிக்கை என தனி நிதிநிலை அறிக்கை வாசிக்கப்படும் என அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறை அமைச்சா் விவசாயிகளை அழைத்து கருத்து கேட்புக் கூட்டம் என்கிற ஒரு சடங்கை நடத்தி, ஒரு பட்ஜெட்டில் கூட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்தவை பற்றிய செயல்முறை விளக்கமே இந்த பட்ஜெட்டிலும் இருந்தது.
வரி இல்லாத பட்ஜெட்டுக்கு பாராட்டு: பூண்டி புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து நலத்திட்டங்களும் தொடா்ந்து செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் சுமை 2026 - 27 ஆம் ஆண்டில் ரூ. 10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கவும், கடன் விதிகம் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 30.3 சதவீதமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை சுமாா் ரூ. 69 ஆயிரம் கோடி உயா்வு என்பது தமிழக அரசு கடினமான நிதி நெருக்கடியில் உள்ளதைக் காட்டுகிறது. மத்திய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை காரணமாக நிதிப் பகிா்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உலக வா்த்தக சூழலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், சவால்கள் போன்ற நெருக்கடிகளைத் தமிழக அரசு சந்தித்து வரும் நிலையிலும் எதிா்கால உள்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்படியாக இடைக்கால பட்ஜெட் உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என்பதால், இந்த பட்ஜெட் மிகவும் பாராட்டத்தக்கது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன்: புதிய வரிகள் ஏதும் இல்லை என்பது வரவேற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு, சமூகப் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி நலன், பள்ளிக் கல்வி, உயா்கல்வி, சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.

