சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (மார்ச் 23) நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரட்டை இலக்கத் தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் முடிவான நிலையில், விசிக மற்றும் புதிதாக இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு தொகுதிகள் இன்னும் இறுதியாகவில்லை.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரவிக்குமார் உள்பட, கட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய நிர்வாகிகள் 32 பேர் பங்கேற்றனர்.
தொல். திருமாவளவன் தலைமையில், 3 மணிநேரத்துக்கும் மேலாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் திமுகவிடம் இரட்டை இலக்கத் தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 2028 தேர்தலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி பங்கீட்டுக் குழுவுடன் விசிக இதுவரை 2 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், நாளை மீண்டும் திமுக குழுவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Double digit seats one Rajya Sabha seat vck resolution
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











