‘விஜய் கட்சியால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு இல்லை’ என்கிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். விசிக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது?
கடந்த ஒரு வாரமாக காலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். செல்லுமிடமெல்லாம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு பெரும் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது. இந்தத் தேர்தலில் விசிக மட்டுமல்ல; எங்கள் கூட்டணியும் மகத்தான வெற்றி பெறும்.
திமுகவிடம் 8 தொகுதிகளை கண்டிப்புடன் கேட்டுப் பெற்றுவிட்டு, தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளித்தது ஏன்?
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரை விடுதலைச் சிறுத்தைகள் வென்றெடுத்துள்ளது. அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தேர்தல் களத்துக்கு வந்து 27 ஆண்டுகளான பிறகும் விசிக தேர்தல் அரசியல் கட்டமைப்பில் பின்னடைவு உள்ளதாக நீங்கள் கூறியிருப்பது ஏன்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் கட்டமைப்பில் பின்னடைவு இல்லை. அது, தேர்தல் கட்டமைப்பு தொடர்பாகப் பேசியது. தேர்தல் பணி செய்வது, வாக்குச்சாவடி குழு அமைப்பது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வலிமைப்படுத்த வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குத் திரும்புவதாக அறிவித்தது ஏன்?
சட்டப்பேரவையில் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. கடந்த 2001 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இரண்டரை ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பிறகு ராஜிநாமா செய்துவிட்டேன். சட்டப்பேரவையில் பணியாற்ற வேண்டும் எனப் பலமுறை முயற்சி மேற்கொண்டேன். கடந்த 2006 -இல் தோழருக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன். 2016 -இல் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தேன். எதிர்வரும் 10 முதல் 15 ஆண்டுகள் தீவிரஅரசியலில் பணியாற்ற முடியும். எனவே, சட்டப்பேரவையில் பணியாற்ற ஆசைப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன்.
பிறகு ஏன் கடைசி நேரத்தில் போட்டியிடாமல் பின்வாங்கினீர்கள்?
எனது கட்சித் தோழர்கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள் எல்லோரும் பேசி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது அவசியம்; ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தினால், மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது; எனவே, முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து, போட்டியில் இருந்து விலகி, இளையபெருமாளின் மகனுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளேன்.
ஜாதி பாகுபாடு பிரச்னையில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்துள்ளது குறித்து...?
மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். வேங்கைவயல் பிரச்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்களைத் திரட்டி நேர்மையாக களப் பணியாற்றியது. பலகட்டப் போராட்டங்களை நடத்தியது. காவல் துறையினரின் புலனாய்வில் உள்ளூர் நபர்களே சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்கள். அதில், மாறுபட்ட கருத்து விசிகவுக்கு உண்டு என்றாலும், அது இறுதி முடிவு என்று காவல் துறை கூறியது. இதையடுத்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது என விசிக முடிவெடுத்துள்ளது. வேங்கைவயல் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து முடிவை எடுத்துள்ளனர்.
ஆளும் கட்சியான திமுகவுடன் கூட்டணியில் உள்ளதால் வேங்கை வயல் போன்ற மக்கள் பிரச்னைகளில் விசிக அமைதி காத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?
சம்பவம் நடந்த இரண்டே நாளில் எனது தலைமையில் 5,000 -க்கும் மேற்பட்டோரை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர், தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பிரச்னை குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தலைமைச் செயலர், உள் துறைச் செயலர், டிஜிபி மற்றும் கண்காணிப்புக் குழுவின் (விஜிலன்ஸ் கமிட்டி) கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர், காவல் துறையினரின் வழக்கமான புலனாய்விலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாறியது.
திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்ததாகக் கூறினாலும், தொகுதிப் பங்கீடு முதல் தற்போதைய பிரசாரம் வரை கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சுமுக உறவு இருப்பதாகத் தெரியவில்லையே?
இது கற்பனையானது. தொகுதிகள் ஒதுக்கீட்டின்போது, சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதுபோல, ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதிமுக கூட்டணியிலும் இருந்தது; ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. திமுக கூட்டணியில் சலசலப்பு இருப்பதாக மீண்டும் மீண்டும் ஊடகங்கள் பெரிது படுத்துவது உண்மையல்ல. பேச்சுவார்த்தையில் இருந்த கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து இணக்கமாக தேர்தல் பணிகளைச் செய்து வருகிறோம்.
கள்ளச் சாராய உயிரிழப்புகள் ஏற்படும்போது, மதுவிலக்கு குறித்து குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது பேசாதது ஏன்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து பரப்புரையை மேற்கொள்ளும். மக்களிடம் அதற்கான ஆதரவைத் திரட்டுவதே எங்களது உறுதிமொழியாகும்.
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும் எனக் கூறி பாஜக வாக்கு கேட்கிறதே?
அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியால் தமிழகத்தின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும். வடஇந்திய மாநிலங்களைப்போல, தமிழகம் மதத்தின் பேரால், சாதியின் பேரால் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாக நேரிடும். சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும். தமிழ், தமிழன் என்ற அடையாளங்கள் அழிக்கப்படும். இவற்றை உணர்ந்தும், பாஜகவை எடப்பாடி கே.பழனிசாமி தோளில் சுமந்து வருவது, அவர் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
விஜய் பின்னால் ஏராளமான இளைஞர்கள் கூட்டம் செல்வதால் உங்கள் கட்சிக்கும், திமுக கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படுமா?
விஜய்க்கு கூடும் கூட்டத்தால் திமுக கூட்டணிக்கும், விசிகவுக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை அவர் பிரிக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். அதிமுக எம்ஜிஆர், ஜெயலிலதா என்ற திரைக் கவர்ச்சியின் ஆளுமையில் வளர்ந்த கட்சி. தற்போது விஜய் என்ற சினிமா கவர்ச்சி களத்தில் வந்திருக்கும் நிலையில், அதிமுகவை ஆதரிக்கக் கூடியவர்கள் பெரும்பாலானோர் விஜய்யை ஆதரிக்கக் கூடும். இது அதிமுக கூட்டணியைப் பாதிக்கும்.
நேர்காணல்: பா.லெனின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


