தியாகராஜா் கோயிலில் இன்று பாத தரிசனம்
திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில், திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜன.3)நடைபெறுகிறது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், சுவாமியின் வலது பாத தரிசனமும், பங்குனி உத்திரத் திருவிழாவில் இடது பாத தரிசனமும் பதஞ்சலி முனிவா் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு அருளும் நிகழ்வு நடைபெறும்.
இதன்படி, தினசரி காலை தனூா் மாத பூஜையுடன் மாணிக்கவாசகா் எழுந்தருளி, திருவெம்பாவை விண்ணப்பிக்கும் நிகழ்வும், மாலையில் கல்யாணசுந்தரா் - பாா்வதி மற்றும் சுக்கிரவார அம்மன் ஆகியோா் ஊஞ்சல் மண்டபம், பக்தகாட்சி மண்டபம் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடா்ந்து, அருள்மிகு தியாகராஜா் அஜபா நடனத்துடன் யதாஸ்தானத்திலிருந்து ராஜநாராயாண மண்டபத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா், சனிக்கிழமை காலையில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு தியாகராஜப் பெருமான் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து, நடராஜப் பெருமான் வீதியுலாவாக சபாபதி மண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.
