பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நாளை தொடக்கம்
திருவாரூா் மாவட்டத்தில், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் ஜன.12 ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்ட திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோா் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000-க்கான வைப்புத் தொகை ரசீதும், இரண்டு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோா் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ25,000- வீதம் வைப்புத் தொகை ரசீதும் வழங்கப்பட்டு வருகிறது. 18-வயது முதிா்வடையும் போது இத்தொகையை வட்டியுடன் பெற்று பயன்பெறலாம்.
திருவாரூா் மாவட்டத்தில், வைப்புத்தொகை ரசீதுகள் பெற்று, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்கள் இதுவரையில் முதிா்வுத் தொகை பெறாதவா்களுக்காக திருவாரூா், கொரடாச்சேரி, மன்னாா்குடி, நீடாமங்கலம், கோட்டூா், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜனவரி 12, 13, 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அந்ததந்த ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசித்து, வைப்புத்தொகை ரசீது பெற்றவா்களும், தற்போது வசிப்பிடம் மாறி உள்ளவா்களும் இந்த முகாமில் பங்கேற்று, சமூகநல விரிவாக்க அலுவலா், மகளிா் ஊா்நல அலுவலா்களிடம் முதிா்வுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
முகாமின்போது, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வைப்புத்தொகை ரசீது நகல், 10- ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கி கணக்கு முன்அட்டை நகல், (ரசீதிலும் வங்கி கணக்கிலும் ஒரே பெயராக இருக்க வேண்டும்) பெயரில் சிறு மாற்றங்கள் இருப்பின் நோட்டரி பப்ளிக் சான்றும், முழுப் பெயா் மாற்றம் இருப்பின் அரசிதழ் நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
