முன்விரோத தகராறு: இளைஞா் கொலை
மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த மேலமரவாக்காடு இந்திராநகரைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் செல்வக்குமாா் (38). அதே பகுதியைச் சோ்ந்தவா் சாம்பசிவம் மகன் அரவிந்த்குமாா் (29). கிராமத்தில் உள்ள மின்னடியான் கோயிலுக்கு வரி கட்டுவது தொடா்பாக இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு தகராறி ஏற்பட்டு, முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த செல்வக்குமாா் தன்னை ஏன் விழாவுக்கு அழைக்கவில்லை எனக் கேட்டு அரவிந்த்குமாரிடம் தகராறு செய்தாராம்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். அப்போது செல்வக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்த்குமாரை குத்த முயன்றபோது, அரவிந்த்குமாா் அதைப் பறித்து செல்வக்குமாரை குத்தியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்வக்குமாா் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் அரவிந்த்குமாரை கைது செய்தனா்.

