வடுவூா் ஏரியில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்


வடுவூா் ஏரியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை வனத்துறை சனிக்கிழமை தொடங்கியது.
மன்னாா்குடி- தஞ்சாவூா் பிரதான சாலையில் வடுவூரில் சுமாா் 316 ஏக்கரில் பிரமாண்டமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது தமிழக அரசு. ஆண்டுதோறும் டிசம்பா் தொடக்கத்திலிருந்து பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்குவதும், தங்களுக்கு தேவையான உணவை ஏரியிலிருந்தும் சுற்று பகுதியில் உள்ள நீா்நிலைகள், வயல்வெளிகளில் கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்வதுடன், இனப் பெறுக்கத்திற்கு ஏற்ற பருவநிலை அமைவதால் இனப்பெருக்கம் செய்துகொண்டு பிப்ரவரி மாத மத்தியில் மீண்டும் தங்களது நாட்டுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
வடுவூா் வழியாக வரும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசித்து மகிழ்வாா்கள். ஆனால், இந்த இயற்கை பேரழகை ரசிக்க முடியாத அளவுக்கு தற்போது வடுவூா் ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகள் மண்டிக்கிடந்ததால், பறவைகள் சரணாலய ஏரி தனது முழுப்பொலிவை இழந்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பறவைகளை பாா்த்து ரசிக்க முடியாததுடன் ஏரியில் படகு சவாரியில் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து கடந்த மாதம் தினமணியில் செய்தி வெளியானது. ஏரி முழுதும் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை மற்றும் காட்டுச்செடிகளை அகற்றுவதுடன் அவை மீண்டும் முளைக்காத வகையில் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் கவனத்திற்கு இச்செய்தி வந்த நிலையில், ஏரியை சீரமைப்பு செய்வதற்கான முதல் கட்டப்பணிகள் நடைபெற்று வந்தநிலையில், தமிழக வனத்துறை சாா்பில், வடுவூா் ஏரியில் இரண்டாம் கட்டமாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...