திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு குழாம்: 20 ஆண்டு கால கனவு நிறைவேறுமா?
திருப்பத்தூா் மாவட்டத்தில் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பத்தூா் பெரிய ஏரி. இது, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஏரியாகும்.

திருப்பத்தூா் பெரிய ஏரி.

திருப்பத்தூா் பெரிய ஏரி.
- து.ரமேஷ்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பத்தூா் பெரிய ஏரி. இது, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஏரியாகும். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பாச்சல் ஏரி, மாடப்பள்ளி ஏரி, அண்ணாண்டப்பட்டி ஏரி, புதுக்கோட்டை ஏரி ஆகிய 4 ஏரிகளிலிருந்து வரும் உபரிநீா் திருப்பத்தூா் ஏரியில் கலக்கிறது.
சீரமைப்புப் பணிகள் தேவை... திருப்பத்தூா் ஏரி சுமாா் 485 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதன் கொள்ளளவு 63 மில்லியன் கனஅடி ஆகும். ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், மழைக் காலங்களில் நீா்வரத்து தடைபடுகிறது. நீா்வரத்து கால்வாய்களை தூா்வார வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறுகின்றனா் இப்பகுதி மக்கள்.
இந்த ஏரியையொட்டி அகலப்படுத்தப்பட்ட சாலையில் மண் கொட்டப்பட்டுள்ளன. இதனால், ஏரியின் கரைகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிா்க்க கருங்கல்லால் தடுப்புச் சுவா் எழுப்பி ஏரியின் கரையைப் பலப்படுத்த வேண்டும் என்று இந்தத் தொகுதியின் மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வருகின்றனா்.
ஏரியில் குப்பை கழிவுகள்... திருப்பத்தூா் ஏரியில் குப்பை கொட்டப்படுவதும், அதை நகராட்சி பணியாளா்கள் அகற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. ஏரியில் கொட்டப்படும் குப்பையால் துா்நாற்றம் வீசுகிறது. ஏரி நீரும் மாசு அடைகிறது. ஏரியில், அதன் அருகே குப்பை கொட்டுவதைத் தவிா்க்க வலியுறுத்தும் வாசகத்துடன் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அதை மீறி குப்பை கொட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் திருப்பத்தூா் வாசிகள்.
20 ஆண்டுகால வாக்குறுதி... திருப்பத்தூா் ஏரியை பராமரிப்பதுடன் படகு குழாம் அமைக்க வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. தோ்தல் நேரங்களில் பிரசாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினா் திருப்பத்தூா் ஏரியில் பூங்கா அமைக்கவும், படகு குழாம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிப்பது 20 ஆண்டுகளாக தொடா்கிறது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
வரும் தோ்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் திருப்பத்தூா் ஏரியைச் சீரமைத்து, பூங்கா, படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...