இந்திரபுரி முருகன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

புது தில்லி, இந்திரபுரி ஸ்ரீ தண்டாயுதபாணி (முருகன்) கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) காலை நடைபெற உள்ளது.
Updated on
1 min read

புது தில்லி, இந்திரபுரி ஸ்ரீ தண்டாயுதபாணி (முருகன்) கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) காலை நடைபெற உள்ளது.
இந்திரபுரி புத் நகரில்  ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 54 ஆண்டுகளாக அப்பகுதி தமிழர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  இக்கோயில் பக்தர்களின் உதவியுடன் மூன்று தளங்களுடன்,  நவீன வசதிகள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி,  புதன்கிழமை காலை 7 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. வேதபாராயணம், திரவ்யாஹுதி,  பூர்ணாஹுதி,  தீபாராதனைகள் நடைபெற்றன.  
வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு தனுர் லக்னத்தில் நூதன ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி, பரிவார தேவதைகள் ஸ்தாபிக்கப்பட்டன.  மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும்,  மாலை 7 மணிக்கு திருப்புகழ் பஜனையும் நடைபெற்றது.
 வெள்ளிக்கிழமை (நவம்பர் 3)  காலை 9 மணிக்கு மஹா பூர்ணாஹுதி,  தீபாராதனை,  காலை 9.30 மணிக்கு  விமானங்கள் மகா கும்பாபிஷேகம்,  10 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 11 மணிக்கு பால்குடம் புறப்பாடும்,  மதியம் 1 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.
 இக்கும்பாபிஷேகத்தை மலைமந்திர் யு. வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் நடத்தி வைக்க உள்ளனர்.  
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவின் அறங்காவலர் ஆர். பாலைய்யா அகமுடையார்  தேவர்,  தில்லி நகரத்தார் சங்கத்தின் செயலர் லெ.அகோரமூர்த்தி உள்ளிட்டோர்  செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com