ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறப்பு நிலை குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட கூடாது: தில்லி உயர் நீதிமன்றம்

மனவளர்ச்சி குன்றிய சிறப்பு நிலை குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது மறுக்கப்படக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:21 pm

DIN

மனவளர்ச்சி குன்றிய சிறப்பு நிலை குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது மறுக்கப்படக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் அது அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விவரம் வருமாறு:
தெற்கு தில்லியில் உள்ள கட்வாரியா சராய் பகுதியில் காய்கறிகளை விற்பனை செய்யும் தம்பதி ஷயாம் நந்தன், மாதா தேவி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தங்களின் சிறப்பு நிலை குழந்தைகள் இரண்டு பேர் தில்லி அரசு, மாநகராட்சி பள்ளிகளில் பல ஆண்டு பயின்றபின்பும், அவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், பள்ளிகளில் சிறப்பு நிலை குழந்தைகளுக்கு பாடம் நடத்த தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை மீது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, "அரசு பள்ளிகளில் மொத்தம் 927 தனி ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. அதில், 432 பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று தில்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, காலியாக உள்ள தனி ஆசிரியர்கள் பணியிடங்களை நிறப்பக் கோரி தில்லி அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎஸ்எஸ்எஸ்பி) பலமுறை கோரிக்கை விடுத்தும், காலி பணியிடங்கள் நிறப்பப்படவில்லை என்று தில்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்:
சிறப்பு நிலை குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி வழங்குவது மறுக்கப்படக் கூடாது. இது வருத்தமளிக்கக்கூடய விவகாரமாகும். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் அது அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
தனி ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக தில்லி அரசு இதுவரை அளித்துள்ள கோரிக்கைகளின் விவரங்களையும், தனி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கான காரணத்தையும் தில்லி அரசு பணியாளர் தேர்வாணையம் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதியான நவம்பர் 30-யன்று, இந்த விவகாரத்தை கையாளும் தில்லி தேர்வாணையத்தின் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2009-ம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தில்லி அரசு பள்ளிகளில் குறைந்தது 2 தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் சிறப்பு நிலை குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிகளில் குறைந்தது ஒரு தனி ஆசிரியராவது பணியமர்த்தப்பட்டுள்ளார் என முந்தைய விசாரணைகளின்போது தில்லி அரசு தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.