தேசிய கைவினை, கைத்தறி அருங்காட்சியகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேலங்கிகள் திருட்டு

தில்லியில் உள்ள தேசிய கைவினைக் கைத்தறி அருங்காட்சியகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காஷ்மீர் ரக மேலங்கிகள் (ஸால்) திருட்டுப் போயுள்ளன.
Updated on
1 min read

தில்லியில் உள்ள தேசிய கைவினைக் கைத்தறி அருங்காட்சியகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காஷ்மீர் ரக மேலங்கிகள் (ஸால்) திருட்டுப் போயுள்ளன.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லி லுட்யன்ஸ் மண்டலத்தில் உள்ள பைரோன்சிங் மார்க்கில் தேசிய கைவினைக், கைத்தறி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.  இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைமையான 16 காஷ்மீர் மேலங்கிகள் (ஸால்)  செவ்வாய்க்கிழமை திருட்டுப் போனது.  அருங்காட்சியகத்தில் உள்ள மேலங்கிகளை அதன் ஊழியர்கள் கணக்கிட்ட போது இத்திருட்டு விவரம் தெரிய வந்தது.  இது தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு மேலாளர் திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் அருங்காட்சியகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது,  1959-ஆம் ஆண்டில் இருந்து 1976-ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட 16 ஸால்கள் திருட்டுப் போனது தெரிய வந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய்  என்பதும் தெரிய வந்தது.
மேலும்,  அருங்காட்சியகத்திற்கு சில வாரங்களாக "ஆராய்ச்சியாளர்' எனக் கூறிக் கொண்டு வந்து பார்வையிட்ட  நபர் இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம்  எனஅருங்காட்சியக ஊழியர்கள் விசாரணையின் போது கூறினர். அருங்காட்சியகத்திற்கு வழக்கமாக ஞாயிறு,  திங்கள்கிழமைகளில் விடுமுறை என்பதால் அந்த தினத்தில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து,  அருங்காட்சியக பார்வையாளர்கள் பெயர் விவரப் பதிவு புத்தகத்தில் பதிவான பெயர்கள், தொலைபேசி எண்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அருங்காட்சிய ஊழியர்கள்  யாரும் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.  அருங்காட்சியகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிப் பதிவுகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com