மழை நீர் சேகரிப்பு: 2 மாதங்களில் அமைக்கவில்லை என்றால் ரூ. 5 லட்சம் அபராதம்: பள்ளி, கல்லூரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மழை நீர் சேகரிப்பு அமைப்பை இரண்டு மாதங்களில் நிறுவ வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.
Updated on
1 min read

தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மழை நீர் சேகரிப்பு அமைப்பை இரண்டு மாதங்களில் நிறுவ வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.
இதை மீறும் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, தீர்ப்பாய அமர்வு அளித்த உத்தரவின் விவரம்:
தில்லி அரசு, தில்லி ஜல்போர்ட், தில்லி பொதுப் பணித்துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவை அடுத்த ஒருவாரத்தில் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அணுகி, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஆய்வு செய்ய மனு அளிக்க வேண்டும்.
இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு நடத்தி, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவார்கள். மாதம் இறுமுறை இந்தக் குழு கூடி, பள்ளி கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள மனுக்களை பரிசீலித்து விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ சாத்தியமில்லை என்றால் அதற்கான விலக்களிக்கும் சான்றிதழை குழு அளிக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி, கல்லூரிகள் சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும். அந்தத் தொகையைக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு அருகே உள்ள பூங்காக்களிலே அல்லது வேறு இடங்களிலோ மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.
மழை நீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு தில்லி கல்வித் துறை, தில்லி ஜல் போர்ட் ஆகியவை மூன்று நாள்களுக்குள் நோட்டீஸ்களை அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com