ஜர்வால் எம்எல்ஏ ஜாமீன் மனு: தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்


தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வரும் தியோலி சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினர் பிரகாஷ் ஜர்வால் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் பிப்ரவரி 19-ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் முன்னிலையில் தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தாக்கியதாக எழுந்த புகாரில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.இருவர் சார்பிலும் ஜாமீன் கோரி தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை கடந்த பிப்ரவரி 23 தேதி விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இருவர் மீதும் குற்றப் பின்னணி இருப்பதாகவும், திட்டமிட்ட குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரகாஷ் ஜர்வால் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தலைமைச் செயலர் அளித்துள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் அவருடைய மருத்துவ அறிக்கையும், தில்லி முதல்வரின் ஆலோகர் வி.கே. ஜெயின் வெளியிட்ட அறிக்கையும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, எம்எல்ஏ ஜர்வால் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வியாழக்கிழமை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்எல்ஏ ஜர்வால் சார்பில் மூத்த வழக்குரைஞர் ரபீக்கா எம் ஜான் ஆஜராகி, "இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து விட்டது. இதனால், எம்எல்ஏ ஜர்வாலை மேலும் நீதிமன்றக் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் எழவில்லை. சம்பவம் நிகழ்ந்த மறுதினம் பிற்பகல் 1 மணிக்குத்தான் இந்த வழக்கு தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மதிப்பிடத் தவறிவிட்டார். இந்த வழக்கில் புகார்தாரர் (அன்ஷு பிராகஷ்) தில்லி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு கொள்ளும் வகையில் செல்வாக்குமிக்க பதவியில் இருந்து வருகிறார். இதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எம்எல்ஏ ஜர்வால் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீஸார் சித்திரித்துள்ளனர். ஆனால், அந்த வழக்குகள் இயல்பாகவே அரசியல் தொடர்புடைய வழக்குகளாகும். மேலும், எம்எல்ஏ தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிட வாய்ப்புள்ளதாக செஷன்ஸ் நீதிமன்றம் பொதுவான கருத்தை கூறியுள்ளது' என்று வாதிட்டார்.
இந்த வாதத்திற்குப் பிறகு, இந்த விவகாரத்தில் தில்லி மாநகர் காவல் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி முக்தா குப்தா, வரும் மார்ச் 7-ஆம் தேதிக்குள் நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...