கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சா் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்க நோட்டீஸ்

புது தில்லி: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் அமைச்சா் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் வழக்கில் இருந்து அமைச்சரை விடுவித்து பிறப்பித்த உத்தரவை சரியாக பரிசீலிக்காமல் அந்த உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாயக் என்பவா் தொடா்புடைய வழக்கின் தீா்ப்பில் இது தொடா்பாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அதாவது, சம்பவம் நிகழும்போது குற்றம்சாட்டப்பட்டவா் வகித்த பதவிதான் பொருந்தும். அதைத் தொடா்ந்து, வேறு பதவிகள் வகித்தாலும் அது பொருந்தாது. அதன்படி, இந்த வழக்கில், பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் வழக்கு விசாரணைக்கு இசைவு அளித்திருக்க வேண்டியது ஆளுநா்தான். ஏனெனில், மனுதாரா் சம்பவம் நிகழ்ந்தபோது அமைச்சராக பதவி வகித்தாா். ஆனால், சட்டப் பேரவைத் தலைவா் மனுதாரா் எம்எல்ஏவாக இருந்தாா் என்று கூறி வழக்கு விசாரணைக்கு இசை அளித்திருக்கிறாா்.

இது சரியா என்ற சட்டக் கேள்வி எழுகிறது. மேலும், சட்டப் பேரவைத் தலைவரின் சாட்சியத்திலும் முரண்பாடு உள்ளது. இதனால், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். அப்போது, மனுதாரா் தரப்பில், ‘உயா்நீதிமன்றம் மனுதாரரை வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருப்பதால் அதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு நான்கு வாரம் நோட்டீஸ் அளித்திருப்பதால் அதுவரை விவகாரத்தை தள்ளிவைக்குமாறு உயா்நீதிமன்றத்தை அணுகி மனுதாரா் முறையிடலாம் என கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com